Friday, January 5, 2024

பெங்களூரு பெண்ணெ தோசேயும் திருச்சி நெய் ரோஸ்ட்டும்….

 

மனிதன் வாழ அத்தியாவசியமானவைகளில் முதன்மையானது உணவு. அதிலும் வாய்க்கு ருசியான உணவாக இருந்து, ருசி கேட்கும் நாக்கு உள்ளவர்களாக நாம் இருந்தோமென்றால் சொல்லவே வேண்டாம், ஒரு ஃபுல் கட்டு கட்டி விடுவோம்.
30 வருடங்களாக இந்தியா வரும்போதெல்லாம் பெங்களூர் விஜயத்தின்போது சில உணவகங்களில் சாப்பிட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக பெங்களூரில் நிறைய, விதவிதமான உணவு பண்டங்களை ருசிக்க முடிகிறது.
பெங்களூர்வாசிகள் (மன்னிக்கவும்) கொஞ்சம் திண்ணி பண்டாரங்கள். காலையிலிருந்து இரவு வரை ரோடுகளில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் நின்றவன்னம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கொறிப்பதற்கு எல்லா பேக்கரிகளிலும் கூட்டம். எங்கும் வட இந்தியர்களின் பானி பூரி மற்றும் வடகிழக்கு அழகுப்பெண்களின் மொமோஸ் மயம். எல்லா ஹோட்டல்களிலும் சொய்ங்.. சொய்ங் என தோசை சத்தம். லஸ்ஸி கார்னர், சமோசா, பாவ்பாஜி ஸ்டால், கணேஷ் ஜூஸ் சென்டர்கள். BVK ஐயங்கார் ரோட்டில் சீதாப்பழ ஜூஸ் செய்துகொடுத்த கன்னட இளைஞனை ஆரத்தழுவிக்கொள்ளலாம். அவ்வளவு ருசி.
உணவுப்பண்டங்களின் ருசியிலும் சமைக்கும் விதத்திலும் சென்னைக்கும் பெங்களூருக்கும் நிறைய வித்தியாசம். சென்னையில் கெட்டியான தோசை மாவை கிண்ணத்தில் அள்ளி டொக்கென தோசைக்கல்லில் கொட்டி, சர்.. சர்ரென்று சுற்றுவது போல இங்கு சுற்றாமல், மாவை கொஞ்சம் நீராகவே கரைத்து கல்லில் ஊற்றும் போதே இந்தியன் நியூஸ் ரெவ்யூ போல அழகாக வட்டமாக தோசை விரிந்து உடனே ஆங்காங்கே புள்ளிகள் தோன்ற, தோசைக் கரண்டியால் எண்ணெயை ப்ளக்கென அள்ளி தெளிப்பதை பார்க்க, நமக்கு பகீர். கிழங்கு மசாலை அள்ளி தோசைக்கு நடுவில் வைத்து பாய் சுருட்டுவது போல் சுருட்டி தட்டில் வைக்கப்படும் ஒரு மசால் தோசையே வயிற்றை நிரப்பி விடுகிறது. தோசை திக்காக இருந்தாலும் நல்ல முறுகல்.
தாவங்கரே பெண்ணெ தோசே (வெண்ணெய் தோசை) ரொம்ப பிரபலம் இங்கே. இந்த பலகாரத்தை நான் தாவங்கரேயிலேயை சாப்பிட்டிருக்கிறேன். பத்து, பதினைந்து தோசைகளை கல்லில் ஊற்றிய பின், கையால் வெடிகுண்டு சைஸில் உள்ள வெண்ணை உருண்டையை அள்ளி அப்படியே பொல பொலவென தோசைகள் மேல் தெளிக்கிறார். என்னா தாராள மனசு! ‘உருகுதே.. மருகுதே… ஒரே பார்வையாலே’ என வெண்டைக்கட்டிகள் பாடியபடியே தங்கள் சுயரூபத்தை இழந்து தோசை புள்ளிகளை நிரப்பி ஜிகுஜிகு என நடனமாட, அடுத்த நிமிடம் சர்.. சர்..ரென தோசைகள் சுருட்டப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட, ‘பல்லியா’ எனப்படும் வேக வைத்து மசித்த உ.கிழங்கு, வெங்காயம் (மஞ்சள் தூள் கலக்காத) வெண்கலவையை தொட்டுக்கொள்ள வைக்கிறார்கள். பச்சை மிளகாய் வாசனை மணக்கும் தே.சட்னி, அதில் முக்கிய பெண்ணெ தோசா+ பல்லியா கூட்டணி நம் சுவை நரம்புகளை சுண்டி இழுத்தபடியே தொண்டைக்குள் இறங்கும் போது தூரத்தில் மங்கலாக சொர்க்க வாசல் தெரிகிறது.
பெங்களூர் நீரு தோசா! ஆஹா! சீரகம் தெளித்து உளுந்தே இல்லாமல் தண்ணியாக கரைத்த மாவை கல்லில் சதுரமாக ஊற்றி அப்படியே வெள்ளையாக மல்லு வேட்டி போல மடித்து தட்டில் வைத்து, தொட்டுக்கொள்ள சர்க்கரை+தேங்காய் துருவல் செம்ம காம்பினேஷன். இதைப்போலவே எங்கள் பஹ்ரைன் கேரள நண்பர்கள் வெள்ளை ஆப்பம் செய்து நடுவிலே சர்க்கரை + தேங்காய் துறுவல் வைத்து சுருட்டி கொடுக்கிறார்கள். இதன் பெயர் லவ் லெட்டராம்.
பெங்களூரில் கொஞ்சம் அகலமாக, தட்டையாக ஊற்றப்படும் தட்டெ இட்லி கிடைக்கிறது. கொஞ்சம் ஹெவி. ஒன்று சாப்பிட்டு அடுத்தது சாப்பிடலாமா என நீங்கள் யோசிக்கும்போதே பக்கத்தில் (உங்க) மனைவியின் தட்டிலிருந்து ஒரு ஹாஃப் உங்க தட்டுக்கு வந்துடும்.
எங்கள் வீட்டிலிருந்து நாலே கி.மீ தூரத்தில் இந்திரா நகர் பகுதியில் புதிதாக ராமேஸ்வரம் எனும் ஹோட்டல். ஞாயிறு காலை 8 மணிக்கு லெக்கீஸ் பெண்களுடன் 50 பேர் வரிசையில் நின்று டோக்கன் வாங்கும் அளவிற்கு கூட்டம். கீ(ghee) பொடி இட்லி, ரவா தோசை+சாஹு (குருமா போல), கொத்மீரி ரைஸ் (கொத்தமல்லி சட்னியை சாதத்தில் கலந்து) என காலங்கார்த்தாலயே அதகளம் செய்கிறார்கள் பெண்கள். ஒவ்வொரு ஐட்டமும் குறைந்தது 60,70 ரூபாய். ருசி? சுமார் தான்.
லால்பாக் பகுதி-MTR (மாவல்லி டிபன் ரூம்) போயிருந்தோம். காலை நாஷ்டாவில் பிரதான ஐட்டம் அங்கே சௌசௌ பாத். அதாவது மோட்டா ரவா (சூஜி ரவா)வில் செய்த கேசரியையும் உப்புமாவையும் இரண்டு கின்னங்களில் நிரப்பி ‘ணங்’ஙென ஒரே தட்டில் சட்னியுடன் வைக்கிறார்கள். நல்ல சுவை. தட்டில் தேங்கும் எண்ணெயில் அப்பளம் பொறிக்கலாம்.
‘ஶ்ரீ உடுப்பி பார்க்’ மெனுவில் போண்டா சூப் கண்ணில் பட, ஆர்டர் செய்தோம். வறுத்த வெங்காயம், கடுகு, உ.பருப்பு தாளிதம் செய்து தண்ணீராய் ஓடும் பருப்பு சூப். பக்கத்திலிருக்கும் 2 போண்டாக்களை தூக்கிப்போட்டு அதில் மிதக்க விட்டு .. அட..அட.. செம்ம ருசி. போண்டாக்களை கபளீகரம் செய்த பின் மீதமுள்ள பருப்பு சூப்பை கின்னத்துடன் எடுத்து வாயில் கவிழ்க்க… ப்ப்ப்பபா!
அடைமழைக்கு ஊடே ஹலசூரு பகுதியில் ‘ஓம் சாய் ஸ்கந்தா தோசா காம்ப்’ போயிருந்தோம். (தோசை)கல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள். தோசா மாஸ்டர் பெயர் தாஸாம். மூன்று நிமிடத்திற்கொரு முறை சீராக ஒரே அளவில் 8 தோசைகள் வீதம் நூறு தோசைகளுக்கு மேல் கல்லில் ஜனனம் எடுக்க, கார்களில் இருந்தவன்னம் பெருத்த மார்வாடி மக்கள் மசால் தோசையை மொஸ்க்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் கல்லில் இரண்டு மூன்று தம்ளர் தண்ணீர் விட்டு சீமாறு கொண்டு பாத்ரூம் கழுவி விடுவதைப்போல கல்லை சுத்தமாக கழுவி பிறகு அடுத்த 8 தோசை ஊற்றுகிறார் தாஸ். அங்கே என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால் எண்ணெய் ப்ளாஸ்டிக் பாக்கெட்டை ஊசியால் துளைத்து தோசைகள் மேல் சர்ர்ரென பீய்ச்சி அடிக்கும் முருக(ல்) தாஸ் ஸ்டைலே வித்தியாசமாக இருந்தது.
டாப் 20 உணவகங்கள் பெரும்பாலும் இந்திரா நகர், ஜெயநகர், மல்லேஸ்வரம் பகுதிகளில். ஜே.பி.நகர்/பனஷங்கரி பகுதி ஶ்ரீ கிருஷ்ணம், மல்லேஸ்வரம் CTR (சென்ட்ரல் டிபன் ரூம்), ப்ராமின்ஸ் டிபன் & காபி, Taza திண்டி, மய்யாஸ், Sattvam restaurant (சட்டுவமா இருக்குமோ!) போன்ற உணவகங்களுக்கு பெங்களூர் மக்கள் படையெடுக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் ஒரு மதுரை இட்லி கடை பார்க்கலாம். பொங்கல், பருப்பு வடை, பஜ்ஜி, பாய்லர் டீ என தமிழ்நாட்டு பக்ஷ்ணங்கள் எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்ய மக்கள் தயார்.
பழங்கால வீட்டை துப்புறவு செய்து ஐஸ்க்ரீம் பார்லராக்கி, கல்லூரி இளசுகளுக்கெனவே இயங்கும் இந்திரா நகர் 'கார்னர் ஹவுஸ்'ல் ரூ 90இல் ஆரம்பித்து 200 வரை ‘கையெழுத்து சண்டை’யாம் (Signature Sundae). அங்கே விலை உயர்ந்த ஒரு ஐஸ்க்ரீம் பெயர் ‘சாக்லெட்டால் மரணம்’ (Death by Chocolate). பின்ன! மரணம்னா சீப்பாவா இருக்கும்! விலை ரூ.200. குறைந்தது இரண்டு வகை மரண ஐஸ்க்ரீம்கள் சாப்பிடாமல் மக்கள் வெளியேறுவதில்லை. மோட்டா மணிபர்ஸுடன் குடும்பத்துடன் அங்கே சென்றால் ‘செத்தோம்’.
சிவாஜிநகர் பஸ்டாண்ட் எதிரே ஶ்ரீராஜ் லஸ்ஸி பார். 40 வருடங்களுக்கு முன் ஸ்தாபகமான கடை. மட்கா லஸ்ஸி, காரா லஸ்ஸி, மாங்கோ லஸ்ஸி, குல்ஃபி, ஃபலூடா வகைகள். பிரபல நடிகர்கள் ராஜ்குமார், விஷணுவர்தன், அம்பரீஷ் போன்றோர் முன்பு விஜயம் செய்வார்களாம். மட்கா லஸ்ஸிகளை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கொடுக்கிறார்கள். அதனால் ஸ்பூனால் வெட்டி சாப்பிட வேண்டும்.
நம்மூர் பூரண் போளி (தெலுங்கில் ஒப்பட்டு) இங்கு ஹோலிகே என்ற பெயரில் கிடைக்கிறது. பருப்பு பூரணம் அல்லாது தேங்காய் வெல்லம் சேர்த்தது செம்ம ருசி. நிறைய இடங்களில் ஹோலிகே மனே கடைகள். ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் இளசுகளை ஈர்க்க.
அது சரி! பெங்களூர் பற்றி இவ்வளவு எழுதி விட்டு திருச்சியைப்பற்றியும் கொஞ்சம்…
40 வருடங்களுக்கு முன் சீ.ஏ படிக்கும்போது திருச்சி மேலபுலிவார்ட் சாலையில் ஜாபர்ஷா தெரு வழியாக ஆடிட்டர் ஆபிஸ் போகும்போது தெரு முகனையில் ஆதிகுடி காபி ஹோட்டல் தாண்டி தான் போவோம். வாழை இலை போட்டதும் தண்ணீர் தெளித்து இலையின் நடுத்தண்டை வர்ர்க்.. வர்ரக் என அழுத்த, நெய் ரோஸ்டை மடித்து வைப்பார்கள். சாம்பார் வாளி சின்ன பையன் பெருங்கரண்டியால் சம்பாரை மொண்டு தோசை நடுவில் ஊற்றி அதன் தலையிலேயே சட்னியையும் கொட்டுவான். முறுகல் ஓரங்களை கொஞ்சம் பிய்த்து தோசையின் எல்லைக்கு வெளியே பரவிய சாம்பார் சட்னி கலவையில் முக்கி வாயில் போட்டால் ம்ம்ம்மா.. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இது தான். என்னா ருசி! பக்கத்து இலை மாமா பட்ணம் பக்கோடா, அசோகா அல்வா என தனி உலகில் இருப்பார். எல்லாம் முடிந்து எதிரிப்படைகள் நம் எல்லையிலிருந்து பின் வாங்குவது போல சாம்பார் காரம் நாவிலிருந்து பின் வாங்கும் முன் எதிர்பாரா தாக்குதல் போல பில்டர் காபி வந்து, சாம்பார் காரத்துடன் கலக்கும்போது அடுத்த சில மணி நேரம் நாவில் ருசியுடன் யுத்த களம்.
சட்டென வரைந்த மசால் தோசை ஓவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்



 
All react

ஹெலன்!

 Happy Birthday Madam Helen(82)!

1977-80. நான் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் BSc பட்டப்படிப்பு முடிக்கும் முன் அந்த மூன்று வருடத்திற்குள் 1960இலிருந்து 80 வரை வெளி வந்த நல்ல ஹிந்தி படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்.
முந்தா நேத்திக்கி தானே பார்த்தோம், இந்த படத்திலுமா! என வியக்க வைக்கும் அளவிற்கு பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகை ஹெலன் வந்து போவார். அப்பா ஆங்கிலோ இந்தியர். அம்மா பர்மாவாம். ஹெலன் ஆனி ரிசர்ட்சன் கான் எனப்பெயர்.
அனேகமாக 25 வருடங்கள் தயாரிப்பாளருக்கு சிலவு வைக்காமல் ஜட்டி, பாடி மட்டுமே அணிந்து கவர்ச்சி நடனமாடி புகழ்பெற்றவர். அவ்வப்போது புசுபுசுவென மஸ்லின் துணியை மேலுக்கு சுற்றிக் கொண்டு வந்து ஆட்டமாடி நமக்கு கிளுகிளுப்பூட்டியவர். சில சமயம் சேவல் கொண்டை மாதிரி விதவிதமான வண்ணங்களில் இறகுகளை தலையிலும் பின் பக்கமும் சொறுகிக்கொண்டு பார்க்க கேனத்தனமாக இருந்தாலும் அதையும் ரசித்திருக்கிறேன்.
அப்புறம் 80களில் அருணா இராணி, பிந்து போன்றவர்கள் வந்து, ஆட்டத்தை விட உடல் அழகை காட்டத்தொடங்கியதும் ஹெலன் மெதுவாக பின்னுக்கு தள்ளப்பட்டார். தற்போது கவர்ச்சி ஆட்டத்தையும் கதாநாயகிகளே பார்த்துக்கொள்கிறார்கள் என்பது வேதனை. அதிலும் ஹெலனே பொறாமைப்படும் அளவிற்கு குறைந்த உடைகள்.
கடைசி வரை சிக்கென அதே ஒல்லிபிச்சான் உடம்பு தான் ஹெலனுக்கு. கூர்மையான நாசி, வசீகரமான கண்கள், செம்பட்டை முடியுடன் அழகிய முகம் அவருக்கு. கிட்டத்தட்ட ஷர்மிளா தாகூர் போன்ற அழகான நாசி. அதனாலேயே இந்த ஓவியம் வரையும் போது சர்வ சிரத்தையுடன் அவரது நாசியை அழகாக வரைய முயற்சித்தேன்.
தெரியும்! சர்ரர்ருன்னு கீழே போய் படத்தை பார்த்திருப்பீங்களே!
சின்ன வயசுல எங்கம்மா ‘எப்ப பாத்தாலும் மிட்டாய் சாப்பிட்டுகிட்டே இருந்தேன்னாக்க உனக்கு பூச்சி பல் தான் வரும்’ என எச்சரித்தது போல ஹெலனின் அம்மா செய்யவில்லை போலும். அழகான முகத்துடன் வாயை திறந்தால் போச்சு.. பூச்சி பற்கள்.
‘ஹௌரா பிரிட்ஜ்’ படத்தின் ‘மேரா நாம் சின் சின் சின்’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்.
ஜங்லி படத்தில் ஷம்மி கபூருடன் சேர்ந்து ‘அய்யய்யா கரூன் மேன் க்யா சூக்கு சூக்கு’ பாடலுக்கு நடனமாடி இருப்பார். பாடல் சூப்பர் ஹிட். தீஸ்ரி மன்சில் படத்திலும் ஷம்மி கபூருடன் சேர்ந்து இவர் ஆடும் ‘ வோ ஹசீனா சுல்ஃபா வாலி’ பாடலும் செம்ம ஹிட்.
தமிழ் படம் உத்தமபுத்திரனில் சிவாஜியுடன் ‘மன்னவா நீ ஓடிவா’ என ஓடி வந்து குதித்து ‘ ஒன்னும் ஒன்னும் ரெண்டு, உன் மேல் ஆசை உண்டு’ பாடலுக்கு அசத்தலான நடனமாடி இருப்பார். ஜீரணிக்க முடியாத விஷயம், இப்பாடலில் முழு உடையணிந்திருப்பார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹெலன்!
பென்சில் ஓவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்.
No photo description available.
ctions:

Monday, February 21, 2022

ஜம்புநாதன் சார்...

கையில் இரண்டு பெட்டிகளுடன் தாதர் ஸ்டேஷனில் ரயில் மாறி வெஸ்டர்ன் ரயில்வே பம்பாய் சென்ட்ரலில் ப்ளாட்ஃபார்ம் நெ. ஒன்றில் காத்திருந்த ரயிலில் ஏறி அமரவும் ரயில் மெதுவாக நகரத்துடங்கியது. சுற்றிலும் வெள்ளை ஜிப்பா, பெருத்த சரீரமுள்ள, பான்பராக் குட்கா ஆசாமிகள். குஜராத்திகள். பே லாக் (2 லட்சம்), த்ரன் லாக் (3 லட்சம்) என வளவளவென வியாபாரம் பற்றி பேச்சு. என்னுடைய இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்திருந்த ஆசாமி சற்றும் கவலையின்றி என்னை இன்னும் நெறுக்கி, கொல்லென இருமும்போது என்னையும் சேர்த்து உலுக்கி நகர்த்தினார். வாப்பி, வல்சாட், நவ்சாரி என ஸ்டேஷன்களில் மக்கள் ஏற ஏற, பக்கத்து ஆசாமி என் முதுகுக்கு பின்னால் சரிந்து தூங்க, நான் சீட் நுனியில்.

தூக்கம் வரவில்லை. மனசும் சரியில்லை. பங்குச்சந்தை சரிவால் வேலை போய் இரண்டு மாதங்கள் பம்பாய் முலுண்டில் அண்ணன் வீட்டில் ஜாகை. மனைவி பிரசவத்திற்கு போயிருந்த நேரத்தில் இந்த புதிய வேலை கிடைத்து, 8 வருட பம்பாய் வாழ்க்கையை விட்டு குஜராத் பக்கம் போகிறேன்.
கம்பெனியின் தலைமை அலுவலகம் பம்பாய் வொர்லி பகுதியில். ஆருயிர் பால்ய நண்பன் கணபதி

சிபாரிசால் அங்கே க்ரூப் ஃபைனான்ஸ் கன்ட்ரோலராக இருந்த ஜம்புநாதன் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால் இன்டர்வியூவில் எந்த கேள்வியும் கேட்காமல் வேலை கிடைத்தது.
ஜம்புநாதனும் திருச்சிக்காரர். தென்னூர் சுப்பையா ஸ்கூல் தாண்டி ஹிந்தி பிரச்சார சபா எதிரே உள்ள அக்ரஹாரத்தில் அவருக்கு வீடு. அவரது மைத்துனர் சங்கர் என் செயின்ட் ஜோசப் பள்ளித்தோழன். கோபால் புக் டெப்போ புத்தகக்கடையை மலைவாசல் எதிரே வைத்திருந்தவர்கள்.
ரயில் மூச்சிரைத்தபடி சூரத் ப்ளாட்ஃபாரத்தில் நுழைய, 'ச்சாய் .. ச்சாய்வாலா' என சத்தம். ஒரு கும்பல் தபதபவென வண்டியில் ஏறி நெருக்கித்தள்ள, குண்டு ஆசாமி வெகுண்டு எழுந்தான். இப்போது ஏறக்குறைய அவன் மடியில் உட்கார்ந்திருந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்க்லேஷ்வர் ஸ்டேஷன் வர, முட்டித்தள்ளி நீந்தி பெட்டிகளோடு ப்ளாட்ஃபாரத்தில் குதித்து கம்பெனி காருக்காக காத்திருந்தேன். காற்றில் ஏதோ வாடை மற்றும் புகை. . மூக்கு நமநமவென அரித்தது. காரணம் அங்க்லேஷ்வரில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் மருந்து, சாயம் மற்றும் ரசாயனக்கழிவுகள். சுகாதாரக்கேடு அதிகம். ஆஸ்த்துமா நோய் வருமாம்.
இந்த ஊர்ல எத்தினி நாள் இருப்பமோ என யோசிக்கும்போதே அம்பாசடர் கார் ஒன்று வந்து நின்றது. வாய் நிறைய பான்பராக்குடன் வந்த ஆசாமி மதராஸியான என்னை அடையாளம் கண்டு சதானந்த் ஹோட்டலில் இறக்கிவிட்டான். குளித்துவிட்டு டிபனை முடித்துக்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிப்போகும் கைதி போல கம்பெனிக்கு அழைத்துப்போனார்கள்.
ஆன்ட்டிபயோடிக் மருந்துகளான அமாக்ஸிஸிலின், செஃபலாக்ஸின் தயாரிப்பவர்கள். கம்பெனியில் என்னைத்தவிர எல்லோருமே குஜராத்திகள். ஒருவரும் அடக்கமாகவோ பதவிசாகவோ பேசமாட்டார்கள். ஃபாக்டரியில் வேலை செய்யும் முக்காவாசிப்பேர் பரூச், படோதா பகுதியிலிருந்து தினமும் ரயிலில் அப்டௌன் செய்பவர்கள். பெண்கள் சதா நொறுக்குத்தீனி அசை போட்டுக்கொண்டிருக்க, ஆண்கள் நொடிக்கொரு முறை தாய் மற்றும் சகோதரியை குறிப்பிட்டு சொல்லும் ஹிந்தி கெட்டவார்த்தைகளை பிரயோகித்தார்கள். (நிற்க..! அது என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என இப்ப யோசிக்காமல் அடுத்த பாராவுக்கு போகவும்)
சிரிக்காதீர்கள்! கம்பெனி உள்ளே நுழையும்போதே 'ஏண்டா சாலே! ஆறுமாதமா பணம் தராமெ என்னடா கம்பெனி நடத்தறீங்க! என கர்ஜித்தவாரே நம்மிடம் வரும் முரட்டு சப்ளையர்கள்.. மணிக்கொருமுறை சாய் குடித்து குட்கா பொட்டலத்தை கிழித்து வாய்க்குள் போட்டு எச்சில் வழியாமலிருக்க தலையை தூக்கி பேசும் மானேஜர்கள்..படோதாவிலிருந்து வரும் கர்னாவதி எக்ஸ்பிரஸ் இன்று ஏன் லேட் என வெட்டிப்பேச்சு பேசும் மேத்தாக்கள், தேசாய்கள், படேல்கள்..
அவர்களுடன் மதிய உணவு சாப்பிடும்போது கவனிப்பேன்.. சீராக அடுக்கப்பட்ட, அப்பளம் போல ஒரே சைஸில் பத்து பன்னிரெண்டு சன்னமான சப்பாத்திகளை டிபன் பாக்ஸிலிருந்து மொத்தமாக எடுத்து அப்படியே முறுக்கி பிய்த்து, எண்ணெய் நிரம்பிய ஆலு சப்ஜியில் முக்கி எடுத்து சாப்பிடுவார்கள். பொதுவாக குஜராத்திகள் எல்லோரும் உணவுப்பிரியர்கள். காலை உணவு டோக்ளா சாபுதானா வகையரா. மதியமும் இரவும் ரோட்டி, எண்ணெய் சொட்ட சப்ஜிகள், கிச்சடி, நடுவே சமோசா, கச்சோரி, ஶ்ரீகண்ட், வேர்க்கடலை (பரூச் கா சிங்தானா பிரபலம்). இரவு பத்து மணிக்கு மேல் வெட வெட குளிரில் ஐஸ் க்ரீம் கடையில் கூட்டம் அம்மும். ஆண்கள் மேல் பாகம் பெருத்து ஒல்லியான கால்களில் முடிய, பெண்கள் எப்படி ஆரம்பித்தாலும் அகலமாகவே முடிவார்கள்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான penicillin-Gயை (Pen-G) எங்கள் நிறுவனம் அரசாங்க அனுமதியுடன் இறக்குமதி செய்வார்கள். அது கிடைப்பதற்கரிய வஸ்து என்பதால் அரசாங்கம் கோட்டா விதித்திருத்தது. பென்ஜி எவ்வளவு உபயோகப்படுத்தினோம் என்ற கணக்கை தணிக்கை செய்ய food and drugs administration துறையிலிருந்து மாதமொரு முறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். தவிர அவ்வப்போது விற்பனை வரி அலுவலகத்திலிருந்தும் வந்து நிற்பார்கள். ஃபாக்டரி அக்கவுண்ட்ஸ் இன் சார்ஜான நான் தான் அவர்களை சமாளிக்க வேண்டும். பொழுது விடிந்தால் பிரச்சனை தான்.
கம்பெனியிலிருந்து பத்தே நிமிடத்தில் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர அடியில் விசாலமான ஃப்ளாட். பெரிய பால்கனி. நான், மனைவி உஷா, இரண்டுமாத குழந்தை பிரஷாந்த் மற்றும் குறை பிரசவ குழந்தை சைஸில் இரண்டு பல்லிகள் அந்த ஃப்ளாட்டில் குடியிருந்தோம். மாலை ஆபிஸிலிருந்து வந்து ஃபளாட்டில் நுழையும்போது உஷா சோஃபா மீது ஏறி நின்று கொண்டிருப்பாள், அறை ஒரத்தில் தரையில் பல்லி நின்று கொண்டிருப்பதால். சிலசமயம் சுவற்றிலிருந்து ச்ச்ச்சப்ப்ப்பென சப்தத்துடன் பல்லி தரையில் குதிக்கும்போது உஷாவின் அலறல் தொடரும்.
காலை மாலை பான்பராக் அம்பாசடர் வந்துவிடும். நாங்கள் ஐந்து மானேஜர்கள் ஒரே பில்டிங்கில் வசித்தாலும் ஆபிசில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். எதை கேட்டாலும் குதர்க்கமாகவே பதில் சொல்லும் ஸ்டோர்ஸ் மானேஜர் படேலுக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.
'என்னங்க படேல்சாப்.. ரெண்டு நாளா ஆபிஸ் வரலியே நீங்க?' வாஞ்சையோடு கேட்பேன்.
'அர்ரே! பீவி புக்கார் ஹெ.. (மனைவிக்கு உடம்பு சரியில்லை..')
அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும்.
'ஆமா.. உங்க வைஃப்க்கு தானே காய்ச்சல்.. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்க?'
'பின்னே நீயா லீவு எடுப்பே?'
இவன் பட்டேல் இல்லை.. பொட்டேல். சரியாக வாங்கி கட்டிக்கொண்டேன். அன்றிலிருந்து நான் அவனிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.
கம்பெனியில் எல்லோருமே எகத்தாளமாக பதில் சொல்கிறார்களே! காலை எட்டு மணிக்கு ஃபாக்டரி உள்ளே நுழையும்போது இரும்பு பக்கெட்டில் எதையோ எடுத்துக்கொண்டு எதிரே வந்தான் ஆபிஸ்பாய் மஹிசூரி. பக்கெட்டிலிருந்து பக் பக்கென புகை வேறு. 'அதென்னப்பா?' எனக்கேட்ட என்னிடம் 'இது லிக்விட் நைட்ரஜன் சார். ஒரு கரண்டி மொண்டு உங்க உள்ளங்கைல வச்சாக்க அந்த ரசாயணம் கைய பொத்துக்கிட்டு சதை வழியா கீழே இறங்கும். ஊத்தீறவா?' என பக்கெட்டை பக்கத்தில் கொண்டு வந்தவனை தடுத்து 'ஏம்ப்பா.. மஹிசூரி! யாரு பெத்த புள்ளப்பா நீ! ராவுகாலத்தில் பொறந்தியா?' பதறிக்கொண்டு அந்தப்பக்கம் ஓடினேன்.
எப்படி இந்த கம்பெனியில் காலத்தள்ளுவது என யோசிப்பேன். அந்த ஊர் காற்றில் நஞ்சு.. அலுவலகத்தில் வேலைப்பளு.. சக சிப்பந்திகள் ஒத்துழைப்பு இல்லை. ஒரே ஒரு ஆறுதல். தலைமை அலுவலகத்தில் ஜம்புநாதன் சார் மட்டுமே பரிவாக பேசக்கூடியவர்.
மாதமொரு முறை ஜம்புநாதன் சார் ஃபாக்டரி விசிட்டுக்காக பம்பாயிலிருந்து வந்தால் ஆபீஸே அல்லோகலப்படும். பெனிசிலின்-G இருப்பு எவ்வளவு, எவ்வளவு கொள்முதல் செய்தோம், அந்த மாத உற்பத்தி எவ்வளவு என சில எண்களை பார்த்த ஒரு சில நிமிடங்களிலேயே என்ன தில்லுமுல்லு நடந்திருக்கும் என சட்டென கணிப்பார். குறைந்தது இன்ன அளவு அமாக்ஸிஸிலின் உற்பத்தி செய்திருக்க வேண்டுமே. yield குறைய காரணமென்ன என கேள்வி கேட்டு ப்ரொடக்‌ஷன் மானேஜர் சிட்னிஸை நின்ன வாக்கிலேயே உச்சா போக வைப்பார். பதில் சொல்ல அக்கவுண்டன்ட்கள் லோட்டஸ் 123யில் தலையை விட்டு தேடுவார்கள்.
மாலை படு காஷுவலாக மானேஜர்களுடன் 'முஜே எக்ஸ்ட்ரா மஸ்கா!' என ஆர்டர் செய்து மூக்கில் ஜலம் வழிய ரசித்து பாவ் பாஜி சாப்பிடுவார். ஆபிஸை மறந்து கிண்டலடித்து அரட்டையடிப்பார். சிகரெட், குட்கா, மது போன்ற லாகிரி வஸ்துக்கள் கிடையா. டை கட்டும் வழக்கம் இல்லை. டிசைன் மற்றும் நிறமில்லா வெள்ளை அரைக்கை சட்டையை பாண்ட்டுக்குள் திணிக்காமல் எடுத்து விட்டிருப்பார். மெல்லிய சட்டைக்குள்ளிருந்து தொப்பையில்லா வயிற்றில் கருப்பு பெல்ட் தெரியும்.
திடீரென பார்த்தால் ஒரு வார லீவில் திருச்சி பட்டர்வொர்த் ரோட்டிலுள்ள தன் வீட்டு வாசல் திறந்த வெளியில் ஈசி சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அப்பவும் கையில் ஏதோ மானேஜ்மென்ட் புத்தகம். பக்கத்தில் காலி டபரா. அங்கேயும் அவரை விட்டு வைக்காமல் நான் ஆஜர். 'நானும் லீவு சார். ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். உங்களையும் அப்பிடியே பாத்துட்டு...' என ஏதோ சாக்கு. வந்ததே அவரை பார்க்கத்தான் என அவருக்கு தெரியுமோ இல்லையோ,
அருமையான
காபி நமக்கு உண்டு.
நிறைய முறை பம்பாயில் அவரது வீட்டிற்கு கணபதியுடன் போயிருக்கிறேன். அவர் மூலம் வேலைக்கு வந்தவன் என்பது கம்பெனியில் எல்லோருக்கும் தெரிந்தாலும், வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென கொஞ்சம் கண்டிப்புடன் எதிர்பார்ப்பவர்.
பம்பாய் 'தானே' பகுதியில் வீடு அவருக்கு. டானென்று காலை எட்டு மணிக்கு ப்ரீஃப் கேஸ் சகிதம் நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் தன் ஃபியட் கார் பின் இருக்கையில் ஏறுவார். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடனே டிரைவர் சஷ்டி கவசம், சஹஸ்ரநாமம் என காசெட்டை தட்டி விட, இவர் ஸ்லோகங்களை உச்சரித்தபடி எகனாமிக் டைம்ஸ், ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகள், இந்தியா டுடே, சுச்சேதா தலால், சுவாமிநாதன் அங்கலேஸாரியா அய்யர் கட்டுரைகள் என அவர் உலகமே தனி.
விக்ரோலி கொத்ரெஜ் பாய்ஸ் கம்பெனி தாண்டும்போது தண்ணீர் எடுத்து குடிப்பது என எல்லாம் டயத்திற்கு செய்வார். 'வனமாலி கதி சார்ங்கி சங்கி சக்ரீ ச நந்தகி' யின் போது பிரிமியர் பத்மினியிலிருந்து தலையை திருப்பி வெளியே பார்த்தால் வொர்லி சிக்னல் தாண்டும் என சத்தியம் செய்வேன். இது தினமும்..
கம்பெனி முதலாளிகள் காந்தி சகோதரர்கள் ஜம்புநாதன் சொல்வதை தெய்வ வாக்காக மதிப்பவர்கள். பம்பாயிலிருந்து அங்க்லேஷ்வர் பாங்க் மானேஜருக்கு ஒரே போன் காலில் பல லட்சங்களை இன்வாய்ஸ் பில் டிஸ்கௌண்ட் அக்கவுண்ட் மூலம் வரவு வைப்பார். அந்த அளவிற்கு அனுபவமும் இன்ஃப்ளுவென்ஸும் கொண்டவர்.
எப்படியோ ஒருநாள் கணபதி மூலம் எனக்கு பஹ்ரைன் வேலை கிடைத்து விசா வந்து விட்டது. மூன்று மாத நோட்டிஸ் கொடுத்து விட்டு பிறகு நீ போகலாமென ஆபிஸில் சொல்லிவிட விசனத்துடன் வந்து சீட்டில் அமர்ந்தேன். ஏதாவது பிரச்சனை செய்வது என அவர்கள் இருந்ததால் மாலை ஜம்புநாதனுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். 'கம்பெனி விதிமுறைகள் அப்பிடியாச்சேப்பா!.. உன் காண்ட்ராக்ட்ல அப்பிடி போட்டிருந்தா என்ன செய்வே?' என அவர் கேட்க அழுகையே வந்துவிட்டது எனக்கு.
'உடனே ஜாயின் பண்ணலேன்னா பஹ்ரைன்ல விசா கான்சல் பண்ணிருவாங்க சார்' என நான் கெஞ்ச, அவர் 'இப்ப நான் உனக்காக தலையிடுவது சரியில்லப்பா. உன் காண்டிராக்ட் பிரகாரம் மூனு மாச நோட்டீஸ் நீ கொடுக்கனும்.. இல்லாட்டி 3 மாச சம்பளத்தை சரண்டர் பண்ணிட்டு கிளம்பிடு!. நீ அதை பண்ண மாட்டேன்னு நினைச்சிட்டிருப்பாங்க.. மூனு மாச சம்பளத்த பஹ்ரைன்ல சம்பாரிச்சுக்கலாமே! ' என அவர் சொல்ல மறு நாள் காலை லெட்டர் எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த சில மணி நேரத்தில் எனது 'த்யாக் பத்ர' விஷயம் ஹெட் ஆபிஸுக்கு போய், உடனே ஜம்புநாதனிடமிருந்து ஃபாக்டரி வொர்க்ஸ் மானேஜருக்கு டெலக்ஸ் வந்தது, திரைக்குப்பின்னால் நடந்தது யாருக்கும் தெரியாமல். ஆபிஸ் மீட்டிங் ரூமில் சமோசா, கச்சோரி, ஜிலேபி வாசனை. ஃபேர்வெல் பார்ட்டியாம். நாற்பது பேர் கூடி என்னை வாயார வாழ்த்த, நானும் இந்த மாதிரி ஒரு அருமையான ஆபிசை பார்த்ததே இல்லையென இரண்டு நிமிடம் புளுகி (இல்லாட்டி விசா போச்சே!) , சிலரின் உருவப்படத்தை (ஜம்புநாதன் உள்பட) கார்ட்டூனாக வரைந்து காட்டி, கைத்தட்டல் பெற்று, ஓரிரு நாளில் பம்பாய் வந்து, விமானம் ஏறும் முன் ஜம்புநாதனிடம் ஆசி பெற்று பஹ்ரைன் வந்திறங்கி 23 வருடங்கள் ஓடியது தெரியவில்லை.
பி.கு: ஜம்புநாதன் சாருக்கு இந்நேரம் 75 வயது பூர்த்தியாகியிருக்கும்.(10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக புற்று நோய் வந்திராவிட்டால்)

வயிறு பெருகி வருமோ!

 1994.. பஹ்ரைன் ஸ்வாகத் உணவகம்...

குறுகலான சூக் (souq) பகுதியில் மனாமா கிருஷ்ணங்கோயிலுக்கு எதிரே ஸ்வாகத் ரெஸ்டுரன்ட். மொட்டை மாடியில் தண்ணி தொட்டி மேலே ஏறுவது போல குறுகலான படிக்கட்டுகளில் ஏறினால் முதல் தளம். நாலைந்து குடும்பங்கள் பாவ்பாஜி, மிசால் பாவ் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கன்னட இளைஞன் நம் முன் வைக்கும் வடா பாவ், மசாலா சாய் 250 ஃபில்ஸ் (அப்போதைய இந்திய ரூபாயில் 25 ரூபாய்)
அதே பகுதியில் பிரம்மச்சாரி இளைஞர்கள் படையெடுக்கும் நம்பூதிரி மெஸ். சபரிமலைக்கு மாலை போட்டு காவி உடையில் வேட்டியை மடித்து கட்டி நிற்கும் கடை ஓனர் நம்பூதிரி. அரைத்துவிட்ட சாம்பார், முளகூட்டன், மோர் குழம்பு, கூட்டு, பொறியல் இத்யாதி. திவ்யமான சாப்பாடு. நம்பூதிரி ஒரு தினார் (100 ரூபாய்) வாங்கி சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொள்வார். வாசலில் 555 சிகரெட் பாக்கெட்டை கிழித்து சிகரெட்டுகள் மற்றும் வத்தி குச்சிகளை பரத்தி வைத்திருப்பார். அது இலவசம். குப் குப்பென்று புகை விட்டபடியே கிளம்பும் மக்கள்.
90களில் பஹ்ரைனில் ஒரே தமிழக உணவகம் என்று சொல்லக்கூடிய நஃபூரா ஹோட்டல். மங்கிய ஒளியில் கமகமவென சாம்பார், ரவா தோசை மணம் திருவல்லிக்கேணி சைடோஜியை நினைவூட்டும். கல்லாவில் லட்டு, ஜாங்கிரி, கொழுத்த குலாப் ஜாமூன், மிக்சர் பார்க்கும்போதே வாங்க ஆவல் எழும். எல்லா பழங்களையும் போட்டு பஞ்சாமிர்த சுவையுடன் பழ ஜாம்+ அடை வெள்ளியன்று மட்டும்.
மணாமாவில் மற்றொரு பகுதியில் 50 வருட குஜராத்தி ரெஸ்டாரன்ட். மராமத்து செய்யாமல் இன்னும் பழைய மேசை நாற்காலிகள். எண்ணெயில் புரண்டு படுக்கும் ஆலு சப்ஜி, கடி, பச்சை சட்னி வகைகள், கேரட்/சர்க்கரை/க.மாவு கலந்த ஏதோ ஒரு பதார்த், சன்னா மசாலா, உந்தியா, கேலாபாஜி.. நிமிடத்திற்கொரு தரம் கீ (ghee) சுடச்சுட ஃபுல்க்கா ரொட்டிகள் தட்டில் விழும். 'பினா கீ..' சொன்னால் சுக்கா ரோட்டி. 'ராத்திரிக்கி நானெல்லாம் ஸ்ட்ரிக்ட்டா மூனு சப்பாத்தி தான்' என பீற்றிக்கொள்ளும் ஆசாமிகள் கூட சத்தம் போடாமல் எட்டு ஒன்பது ரொட்டிகளை மொசுக்குவார்கள். 'பஸ் கரோ பையா!' என வெட்கத்துடன் பெண்கள் சொல்ல சொல்ல 'ஏக் ஔர் ரோட்டி லேலோ பெஹன்ஜி!' என கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார்கள். அடுத்து சூடான மூங்தால் கிச்சடி, அதன் மேல் மொண்டு ஊற்றப்படும் நெய். கடியுடன் கிச்சடி தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறங்க, சடுதியில் நமக்கு ட்ரைக்ளிசரைடு எகிறும். கல்லாவில் கச்சோரி, டோக்ளா, பாக்கர்வாடி, சேவ், தூத்பேடா, மலாய் பர்ஃபி, ஏலம் தூவிய மஞ்சள் வர்ண ஜிலேபி. பாவிகள்.. அநியாயத்துக்கு நம் பசியை மறுபடியும் தூண்டுவார்கள்.
மைசூர் ரெஸ்ட்ருவண்ட்..
இடிந்து விழுவது போல ஒரு பழைய கட்டிடத்தின் ஒரு மூலையில் இந்த உணவகம். தாடி வைத்த முதலாளி அஜய் மங்களூர்க்காரர் கல்லாவில். பக்கத்தில் சர்ச் மாஸ் முடிந்து வரும் கூட்டம் எல்லோருக்கும் தளும்ப தளும்ப சாம்பார் இட்லி, வடா சாம்பார். சீரகம் தெளித்து உளுந்து கலக்காத பச்சரிசி மாவில் வேகவைத்து செய்யப்பட்ட வெள்ளை நிற நீர் தோசை + தேங்காய் சட்னி ஓரிரு மணியில் கதம்.
அதே பகுதியில் சென்ட்ரல் கபே விருந்தாவன் என மேலும் இரண்டு உடுப்பி ஹோட்டல்கள். வறுத்த பிரெட் துண்டுகள் மிதக்க தக்காளி சூப், முந்திரி பாதாம் அரைத்துவிட்டு எல்லா பச்ச காய்கறிகளும் போட்ட பச்சைக்கலரில் விஜிடபிள் ஹரியாலி, தந்தூரி ரோட்டி, பட்டர் நான். எத்தினி ஐட்டம் செய்தாலும் கபளீகரம் செய்ய மக்கள் தயார்.
சற்றுத்தள்ளி ஆஷாஸ் எனப்படும் மற்றொரு ச்சாட் கடை. வடநாட்டு பையாஜி என்று அழைக்கப்படும் மாஸ்டருக்காகவே பாதி கூட்டம் அங்கே. பானி பூரி, பேல் பூரி, வடா பாவ், ரகடா பட்டீஸ் பறக்கும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கேப்ஸிகம், தக்காளி, வெங்காயம் என எல்லா சமாச்சாரத்தையும் ப்ரெட்டுகளுக்கு நடுவே திணித்து எக்கச்சக்கமாக வெண்ணையை உட்புறம் வெளிப்புறம் தடவி தங்க நிறத்தில் பொறித்து அதை நாலஞ்சு துண்டங்களாக வெட்டி நம் முன் வைக்கப்படும் பாம்பே சாண்ட்விச்+ கெட்ச்சப் அடுத்த சில நிமிடங்களில் ஸ்வாஹா!
மேற்சொன்ன அனைத்து உணவகங்களும் 2000க்கு முன். பின்னர் கௌரி கிருஷ்ணா, சரவண, சங்கீதா பவன்கள் வந்து மினி டிபன் கோம்போ, கொத்து & சில்லி பரோட்டா என ட்ரெண்டை மாற்றி ஜனங்கள் வீட்டிலேயே பிரயோகிக்க ட்ரெட் மில் வாங்க ஆரம்பித்தார்கள்..
ஆச்சு... இப்ப 2020. கோவிட்-19 லாக் டவுன், சமூக இடைவெளி, பகுதி கடையடைப்பு என அரசாங்கம் செவ்வனே தன் பணியை செய்து மக்களை காக்கிறது. கடந்த சில மாதங்களாக மேற்சொன்ன உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாத நிலை. உட்கார்ந்து சாப்பிடும்போது தெரியும் ருசி பார்சல் டேக் அவேயில் இல்லை. அலுமினிய ஃபாய்லில் ஆறிய மசால் தோசை, சிவாஜியும் வாணிஶ்ரீயும் கட்டிப்பிடுத்துக்கிடப்பது போல இட்லிவடை பொட்டலம். முறுகல் இல்லாத பார்சல் ரவா.
திருச்சி ஆதிகுடியில் நீர் தெளித்த வாழை இலையை உதறி, நடுத்தண்டை க்றக்கென நசுக்கி மடித்த தோசை மேல் சாம்பார் விட்டு கெட்டி சட்னியுடன் சாப்பிட்டு முடித்தவுடன் இலையில் மிஞ்சிய சட்னி கலந்த சாம்பாரை வழித்து நக்கும் சுகம் எங்கே! திருவானைக்காவல் பார்த்த சாரதி விலாசில் ரவா தீர்ந்து போவதற்குள் அவசரமாக இரவு 8 மணிக்கு நுழைந்து சாப்பிட்டவுடன் அதே காரத்துடன் சாப்பிடும் காபி எங்கே! காசு கொடுக்க முடியாமல் ஹோட்டலில் மாவு ஆட்டும் சுகம் எங்கே! (கீழே ஓவியத்தில்)
வசந்த காலம் வருமோ! நிலை மாறுமோ! வயிறு பெருகி வருமோ!

ப்ரொபசர் வெல்லூர்

 திருச்சி மெயின் கார்ட் கேட்..

வீஈஈஈஈஈஈ என ஹாரன் ஒலி எழுப்பி அசுர வேகத்தில் நம்மை கடந்து போகும் திருச்சி-ஶ்ரீரங்கம்-திருச்சி (TST) டவுன் பஸ் காரனை சபித்தபடி, வலது பக்கம் திரும்பினால் தெப்பகுளம் போஸ்ட் ஆபீஸ். மைதா பசையால் கவர்களை ஒட்டி அவசரமாக தபால் பெட்டியில் போடும் மக்களை கடந்து, வாசலுக்கு வெளியே நடை பாதை வரை சேர் போட்டு சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து வந்து குவியும் வாடிக்கையாளர்களுக்கு 60 பைசாவிற்கு பழ ஐஸ்கிரீம், 40 பைசாவிற்கு சிரப் வழங்கும் மைக்கேல் ஐஸ்கிரீமை பார்லரை கடந்து, இந்தியா சைக்கிள் மார்ட், திருச்சி எக்ஸ்ரே கடைகளை தாண்டி, மட்டன்+மீன்+சாம்பார்+சிகரெட்+வெத்திலை+ஊதுபத்தி எல்லாவற்றையும் கலந்தடிச்சு ஒருவித ஆசுபத்திரி வாடையை காற்றில் பரப்பும் அசைவ உணவகத்தை கடந்து, ஜெகன்னாதன் புப் டெப்போ போர்டு போட்ட CA நண்பன் Aloysius இன் வீட்டை அடுத்து, படாரென கல் தடுக்கி குதித்து குடுகுடுவென நாலு ஸ்டெப் ஓடி, வலது பக்கம் சந்துக்குள் நுழைந்தால்...
பிரிட்டோ காலனி... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தலா பத்து பதினைந்து மூங்கில் தட்டி போட்ட வீடுகள். ‘Jesus lives here’ மற்றும் ‘ஏசு அழைக்கிறார்’ வாசகங்களுடன் வாசலில் க்ரோட்டன்ஸ் செடி, லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர், சுவேகா மொப்பெட்டுகள். நம்மை பார்த்தும் குரைக்காமல் ‘அடப்போப்பா நீ வேற!’ என அங்கலாய்த்து முகத்தை திருப்பிக்கொள்ளும் கருப்பு சடை நாய்கள். அங்கே வசிப்பவர்கள் எல்லோரும் செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் லெக்சரர், புரொஃபசர்கள். கல்லூரிக்கு சொந்தமான இடம். அதில் ஒன்று தான் ப்ரொபசர் வெல்லூர் வீடு.
‘நீ காஸ்டிங்க்கு (Costing) ரத்னம் காஸ்டிங் அட்வைஸரா படிக்கிறே?’ என யாரோ ஒரு பையன் கேட்க பதிலுக்கு இன்னொருத்தன் ‘இல்ல! நான் புரொபசர் வெல்லூர் சார் கிட்ட டியூஷன் போறேன்’ என்ற மேற்படி சம்பாஷனைகளை நீங்கள் கேட்க நேர்ந்தால் அந்த பையன்கள் CA அல்லது ICWA படிக்கிறான்கள் என்பதும் வெல்லூர் சாரிடம் படிக்கும் பையன் சீக்கிரம் பாஸ் செய்து விடுவான் என்பதும் பொதுவாக நடக்கக்கூடிய சமாச்சாரங்கள்.
ப்ரொபசர் வெல்லூர் சாரிடம் டியூஷன் படிக்க ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். பாட்ச் பாட்சாக கூட்டத்துடன் மாணவர்களை எடுக்காமல் வாசலில் ஏழெட்டு பேரை மட்டும் உக்காத்தி வைப்பார். உள்ளே குஸ்கா வாசனை. வெகு அக்கறையுடன் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக சொல்லிக் கொடுப்பார்.
நடு வயிற்றுக்கு மேல் வரை தொள தொளவென வெள்ளை பாண்ட். கருப்பு பெல்ட். அதற்கு மேலே இரும்புத்திரை சிவாஜி போல் முழங்கை வரை மடித்த வெள்ளை முழுக்கை சட்டை. பாண்ட் பாக்கெட்டில் அடிக்கடி கை விட்டு அங்கு மட்டும் கொஞ்சம் அழுக்கு. ஸ்டெப் கட் மற்றும் காக்கிச்சட்டை கமல் போல நாம் டைட் பாண்ட் போடும்போது அவர் பஃப் வைத்து சம்மர் க்ராப்பில் இந்த உடையில் படு ஸ்டைலாக அந்தக்கால பாப்பிசை பாடகர் போல இருப்பார்.
வெற்று சுவற்றை பார்த்தவன்னம் அவர் சேரில் உட்கார்ந்திருக்க அவர் முதுகை பார்த்தபடி பின்னால் மாணவர்கள். புதிதாக அவரிடம் டியூஷன் சேரும்போது ‘ஒரு தடவ மார்ஜினல் காஸ்டிங் சாப்டரை பாத்துட்டு வந்துடு’ என முன் கூட்டியே சொல்லி விடுவார். ‘பாத்துக்கலாம்.. சரி.. விலாவாரியாகத்தான் சொல்லிக் கொடுப்பாரே!’ என நாம் படிக்காமல் போனால் தொலைந்தோம். கையில் புத்தகம் கூட இல்லாமல், கணக்குகள் சரளமாக அவர் வாயிலிருந்து வர நாம் நோட்டில் எழுதிக்கொள்ள வேணும்.
‘சரி! நீயே கணக்கை போடு’ என மெல்ல புளியை கரைப்பார். நாம் தட்டுத்தடுமாறி குஸ்கா வாசனையை பிடித்துக்கொண்டே ஒருவழியாக முடித்தவுடன் நம் நோட்டை வாங்கி பார்ப்பார் என்று நினைத்தால் அதுவும் கிடையாது. ‘நீயே படி’ என்பார். எழுதியதை நாம் படிக்க, step-by-step ஆக விளக்கி நம்மையே திருத்தி எழுத வைப்பார், இன்னும் வெற்று சுவற்றை பார்த்தபடி.
அடுத்த நாலைந்து மாதங்கள் இதே கதை தான். பையன்கள் சி.ஏ. பரிட்சை பாஸ் செய்து அடுத்த பாட்ச் ஓடிக்கொண்டிருக்கும். பாஸ் செய்த பின்னும் அவருக்கு காசு கொடுக்காமல் இழுத்தடிக்கும் மாணவர்களைப்பற்றி கவலைப்பட மாட்டார். பிறகு நேரில் பார்த்தாலும் கேட்க மாட்டார்.
பின் குறிப்பு 1: தற்போது மைக்கேல் ஐஸ்க்ரீம் பார்லர் அங்கு உள்ளதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். திருச்சி எக்ஸ்ரே உள்ளது. அசைவ உணவகம் போயிந்தி. பிரியாணி வாசனை மட்டும் உந்தி. பத்மா காபி போய் தற்போது போத்தீஸ். பிரிட்டோ காலனி இன்னும் உள்ளது என நினைக்கிறேன் புது வீடுகளுடன்.
பின் குறிப்பு 2: கோகுலாஷ்டமி குட்டி கிருஷ்ணன் படத்தையும் பதிவையும் பதித்த பின் சற்று நேரம் முன் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் ‘ 90 வயது

ப்ரொபசர் வெல்லூர் இறந்து விட்டார் என’.

நடு வகிடு.. ரங்கு.. செம்பூர்

காலை 7 மணிக்கு விழித்து 20,30 நிமிடங்கள் அப்படியே படுத்து கிடப்பதிலே ஒரு சுகம். ஜன்னலுக்கு வெளியே மரங்கள், பறவைகள் சத்தம், இதமான காற்று. பஸ், கார் சத்தமே கிடையாது. அப்ப 27, 28 வயதுதான் இருக்கும். மனசுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகம். அலுவலகத்தில் தினமும் நடக்கும் சம்பவங்களை நினைத்து அசை போடும் நேரம் அது. இதெல்லாம் இயந்திர வாழ்க்கை பம்பாய் நகரில் என்றால் நம்ப முடிகிறதா? பம்பாயில் இயந்திர வாழ்க்கை என்பதெல்லாம் மற்ற மாநிலத்தவர்கள் நினைத்துக்கொள்வது தான்.

நாங்கள் 5,6 பிரம்மச்சாரிகள் சேர்ந்து செம்பூர் chedda நகரில் ஒரு தனி ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். எதிரே செம்பூர் முருகன் கோவில். பக்கத்தில் அங்கங்கே பால்கனியில் சிகரெட்டுடன் பாலக்காட்டு மாமாக்கள். எங்கள் வீட்டில் நண்பர்கள் பட்டாளம் எப்போதுமே கும்மாளம் தான். ஒருவன் 'மீண்டும் மீண்டும் வா' என சத்தமாக பாட்டு போட்டுக்கொண்டிருப்பான். ஒருவன் 'வரக்...வரக்... என்று ப்ரஷ் போட்டு ஜீன்ஸ் பாண்ட்டை துவைத்துக்கொண்டிருக்க, ஒருவன் அட்டகாசமாக சமையல் (சாம்பார், நிறைய தேங்காய் துருவி போடு வெண்டிக்காய் கறி, கட்டித்தயிர்) செய்து கொண்டிருப்பான். நானும் ரங்குவும் காபியுடன் ஆபீஸ் கதைகளை பேசிக்கொண்டிருப்போம்.
யார் இந்த ரங்கு? பாஷ்யம் ரங்கநாதன் என்கிற 'ரங்கு' என் ஆருயிர் நண்பன். அவனுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம். எனக்கும் ஶ்ரீரங்கத்துக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திர வீதி என்று என் தாத்தா, அம்மா, மாமாக்கள் அங்கே குடியிருந்தவர்கள். சுஜாதா, வாலி , பஞ்சாங்கம் புகழ்- குட்டி சாஸ்த்ரி இவர்கள் வீட்டுக்கதைகளை என் மாமாக்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். ரங்கு வீட்டில் எனக்கு தனி மரியாதை. ரங்குவின் அப்பா எனக்கு தனியாக கடிதம் எழுதுவார். 2 இன்லண்ட் லெட்டரில் எழுதும் சமாசாரத்தை ஒரே போஸ்ட் கார்டில் நுனுக்கி நுனுக்கி டைப் செய்து அனுப்புவதிலிருந்து அவரின் சிக்கனம் தெரியும். உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனெரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பழங்கால G.ராமநாதன், SM சுப்பையா நாயுடு,KV மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்றோர் இசையில் எனக்கு மிகுந்த நாட்டம். நானும் ரங்குவும் தீவிர இளையராஜா ரசிகர்கள். 'பட்டுப்பூவே எட்டிப்பாரு' .. 'ஒரு மைனா மைனா' (உழைப்பாளி) போன்ற பாடல்களை அடிக்கடி முனுமுனுப்பான். ஆளை பார்த்தவுடனே 'டேய் நீ ஸ்ரீரங்கம் தானே?' என்று கேட்கத்தக்கனையான கருடாழ்வார் நாசி. படிய வாரிய எண்ணெய் சொட்டும் சிகை. திக்கான மீசை. பெரிய கண்ணாடி, ப்ளீட் வைத்த baggi பான்ட். கொஞ்சம் கூச்சம், முகம் நிறைய சிரிப்பு. இதுதான் ரங்கு.
வாங்கும் சம்பளத்தில் பாதியை உடைகளுக்கும், காசெட்டுகளுக்கும், விதவிதமான காலணிகளுக்கும் செலவழிப்பவன் நான். தினத்திக்கும் நானே இஸ்திரி போட்டு, செர்ரி ப்ளாசம் ஷூ பாலிஷ் போட்டு ஹிந்தி நடிகர்கள் நீலம் கோட்டாரி மற்றும் கோவிந்தாவை ரசிப்பவன் நான். மிடுக்காக உடை உடுத்தும் என்னை ரங்கு மிகவும் ரசிப்பான். 'டேய் ரங்கு... நீ பாம்பேக்காரன் மாதிரி இருந்தாத்தான் உனக்கு ஏதாவது மாட்டும்... இல்லன்னா போயிட்டே இருப்பாளுங்க..' என்ற எனது அறிவுரையை பெருஞ்சிரிப்புடன் ரசிப்பான். (இப்படி சொன்ன திருச்சிக்காரனான எனக்கு திருச்சியிலேயே ஒன்னும் மாட்டவில்லை என்பது வேறு விஷயம். சொல்லித்தான் வைப்பமே!).
ஒரு ஞாயிறு மதியம் ரங்குவை கட்டாயப்படுத்தி நாற்காலியில் உட்கார வைத்து அவன் தலை அலங்காரத்தை மாற்றுவதற்குள் போதும்போதுமென்றாகி விட்டது. அவன் கதற கதற ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரை நீண்டிருந்த தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி, இடது வகிடை மாற்றி நடு வகிடாக்கி , மீசையை ட்ரிம் செய்ய வைத்து 'இளம் நடிகர் பிரஷாந்த் போல இருக்க பாரு' என்று கண்ணாடியை முகத்துக்கு நேரே காட்டியதும் தன் நடுவகிடை பார்த்து தாங்கொனா மகிழ்ச்சியுடன் புளகாங்கிதமடைந்தான்.
அடுத்து ஒரு சுபயோக தினத்தில் கொலாபா கேம்பிரிட்ஜ் மற்றும் பாந்திரா லிங்கிங் ரோடு பகுதிகளில் ரங்குவை கூட்டிப்போய் பைசன் T -ஷர்ட் ,லீ ஜீன்ஸ் பாண்ட், கொவாடிஸ் என ஒரே ஷாப்பிங் spree தான். சிறிய சீப்பை பாண்ட் பின் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணிக்கொருதரம் எடுத்து மயிரை சீவ வேண்டுமென்ற எனது கட்டளையை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டான். அடுத்த சில நாட்களில் ரங்கு நெற்றியில் கேசம் புரள நடு வகிட்டுடன் ஒரு சிவந்த ஹிந்தி நடிகனைப்போல் மாறி விட்டான்.
அவ்வளவுதான்.. மற்ற room mates க்கு பொறுக்கவில்லை.. தக்கலை அக்ரஹாரத்து பையன் இஞ்சினீயர் பத்மநாபன் என்கிற Paddu, திருச்சி கம்பெனி செக்ரட்டரி

சந்துரு .. எல்லோரும் கிடுகிடுவென தாங்களையும் T-ஷர்ட்/ஜீன்சுக்குள் புகுத்திக்கொண்டார்கள். எல்லோருக்குமே எப்போதுமே ஏதோ கனவு மயம் தான். எல்லா பெண்களும் தங்களையே பார்ப்பதாக ஒரு நினைப்பை அவர்களுக்குள் வெற்றிகரமாக விதைத்தேன். தலைக்கு எண்ணெய் வைப்பது? ம்ஹூம்.. ப்டாது.. அது பெருங்குற்றம். பாண்ட்டில் சீப்பு இல்லையென்றால் அது தெய்வ குத்தம். நொடிக்கொருதரம் தலையை சிலுப்பி சீப்பால் வாரனும். 'டேய் நாமளா இது! என எல்லோரும் சிலாகித்தார்கள். காதல் வருகிறதோ இல்லையோ காதல் நமக்கு வரனும் என்கிற ஏக்கம் வரனும் என தத்துவம் பேசி செம்பூர் நகர வீதியில் கட்டிங் சாய் குடித்து வெட்டியாக உலாவினோம். நட்ராஜ் தியேட்டரில் 'maine pyar kiya' படத்தில் பாக்யஸ்ரீ ஒரு சீனில் சல்மான் கானை நினைத்துக்கொண்டு தானே தலையில் செல்லமாக அடித்துக்கொண்டு மெல்ல சிரித்ததை நண்பன் ரங்கு ரசிக்க,மறுநாள் அந்த சீனை பார்க்க நாங்கள் எல்லோருமே தியேட்டரில் ஆஜர். வாழ்கை இப்படியே
இனிமையாக
போனது..
நான் CA. அவன் ACS கம்பெனி செக்ரட்டரி. பங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு மெர்சண்ட் பாங்கிங் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. நிறைய குஜராத்தி, கோவன், மற்றும் மங்கலூரிய இளம் பெண்கள் பாப் கட்டுடன் கீச்சு கீச்சென நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இடம். மதியம் லஞ்ச்சில் அவர்கள் உரிமையுடன் நம் தட்டில் இருந்து சப்பாத்தி கர்ரியை எடுத்து சுவைத்து 'so pungent yaar!' என்று சொன்ன அன்று மாலை நம் நண்பர்களுக்கு treat தான். 'தேவையே இல்லாம இவளுங்க எதுக்குடா குறுக்கா நெடுக்கா போய் நம்மள படுத்தறாளுங்க?' என்ற ரங்குவின் கேள்விக்கு என்னுடைய பதில்: "அதுக்கு தாண்டா நாம இப்பிடியெல்லாம் ஸ்டைலா இருக்கணும்னு அடிச்சுக்கறேன்... இப்ப புருஞ்சுதா?'
சுனிதா ராவத் என்றொரு பெண். (அழகான பெயர்களுடன் சேர்ந்து சகிக்காத குடும்ப பெயர்கள் எதற்கு! ராவத், மித்தல், தொத்தல் என..) குட்டியூன்டாக வடிவானவளாக இருப்பாள். குட்டையாக, நல்ல பூசின மேனியுடன் ஊத்துக்குளி வெண்ணெயை நினைவுக்கு கொண்டு வருவதே வாடிக்கை அவளுக்கு. நொடிக்கொரு முறை தன் அதரங்களை ஈரப்படுத்தி சிலிர்ப்பூட்டுவாள் கிராதகி. நமக்கு தான் பாழும் மனசு! அவள் என்னிடம் வந்து பேசினால் தூரத்தில் தன் க்யூபிக்கிளில் இருந்து தலையை தூக்கி பார்ப்பவன் ரங்கு. டக்....டக் என்ற கூர்மையான ஹை ஹீல்ஸ் சப்தத்துடன் நளினமாக நடந்து நமக்கு மிக மிக அருகே வந்து விகல்பமின்றி நம் கண்களை நேரே பார்த்து 'where is underwriting file ? என்று அவள் கேட்கும்போது நமக்கு மூச்சு முட்டும். ரங்குவிற்கு மூச்சே நின்றுவிடும். அதற்கே அவனுக்கு மதியம் மாவா ஐஸ்கிரீம் வாங்கித்தருவேன்.
ஆபீசுக்கு போகும்போதும் வாசனை திரவியங்கள் பூசி, branded சட்டை, checkered பாண்ட், சனியன்று அரை நாள் என்பதால் T-ஷர்ட் ,காடுராய், டெனிம் பாண்ட், மொக்காசினோ ஷூ, ரிம்லெஸ் கண்ணாடி, மறக்காமல் நடு வகிடு என ரங்கு கலக்கினான். இதில் சிறப்பு என்னவென்றால் அவனது பெற்றோருக்கு ரங்குவை இப்படி நான் மாற்றியது ரொம்ப சந்தோஷம். ஸ்ரீரங்கம் போனால் தட்டில் சீடை காபியுடன் நல்ல வரவேற்பு.
அதுசரி .. இதெல்லாம் செய்து ஏதாவது மார்வாடி, மராத்திய, குஜராத்தி பெண்ணின் மனதில் ரங்கு இடம் பிடித்தானா என்று நீங்கள் கேட்கலாம். அதான் இல்லை.... ஆனால் பம்பாயிலேயே ஆச்சாரமான ஒரு அய்யர் பெண் இவன் மனதில் இடம் பிடித்தாள். அவளது அண்ணன்காரன் Sridharan Rajaraman உம் என் நண்பர் குழாம் தான். நம்ம ரங்குவுக்கு தான் பயமே போய்டுச்சே! தைரியமாக போய் பேசி மணம் முடித்தான். இப்ப இரண்டு பெண்கள். பாம்பேயில் மிகப்பெரிய MNC யில் உயர் பதவியில் இருக்கிறான்.
நான் பஹ்ரைன் வந்த பின் ரங்குவுடன் சில வருடங்கள் தொடர்பு இல்லையெனினும், பிறகு பம்பாய் சென்றபோது அவனை பிடித்து விட்டேன். அதே நடு வகிடு. என்னை பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து சிரித்தான், பல வருடங்களுக்கு முன்பு அவன் சிகையழகை நான் மாற்றி நடு வகிடு எடுக்க வைத்ததை நினைத்து. சென்ற வாரம் கூட வெகுநேரம் பம்பாய் நாட்களைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்தோம். அதே இளமை...அதே கடும் உழைப்பு.. Executive VP & கம்பெனி செக்ரடரி. நாரிமன் பாய்ன்ட் பகுதியில் கடல் காட்சியுடன் அலுவலகம். பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூத்த அதிகாரிகளுக்கு நிதி சார்ந்த வகுப்புகள் எடுக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ரங்குவின் கம்பெனி லா கட்டுரைகள் என பிரபலம்.
மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடு வகிடு எடுத்து தலை சீவினா வாழ்க்கையில் இவ்வளவு உயர்வோமா?